Friday 23 October 2015

Eight Below (2006) : அண்டார்ட்டிக்கா..

அண்டார்க்டிக்கா......வலுவான தோற்றத்தில் ஆண்மையையும் அழகிய உருவமைப்பில் பெண்மையையும் இரண்டர கலந்திருக்கும் உலகின் விசித்திரமான பூமி.குமரிக்கண்டம், அட்லாண்டிஸ் போன்ற வியக்கத்தக்க பேரதிசயங்களை பற்றிய தேடலில் நான் கண்டுக்கொண்ட இன்னொரு உலகம்.எங்கும் பனிப்பாறைகள், ஆளைக் கொல்லும் குளிர் என்று தனக்குள் எந்த அரசியலையும் பெரும்பாலும் சிக்கவைக்காத ஆச்சரியமிக்க கண்டம்.கடந்த மூன்று நூற்றாண்டுகளில் அங்கும் வாழ தன்னை பழக்கப்படுத்தி கொண்டான் மனிதன்.சின்ன வயதில் எனக்குள் ஏற்பட்ட தாகம்தான் அண்டார்டிக்கா போன்றவை.நாளிதழ், இணையம் என்று எங்கு இந்த பெயரை கேட்டாலும் ஓரளவாவது கண்களை அசைத்து விட்டுதான் நகர்வேன்.இணையத்தில் புகைப்படங்களை தேடி பார்த்து மகிழ்வேன்.அதுவே ஒரு திரைப்படம் அண்டார்டிக்காவை மையப்படுத்தியதென்றால்..

ஓர் உண்மை கதையின் பிரதிபலிப்பாய் ஏய்ட் பிளோ திரைப்படம் :

ஜெர்ரி ஷெப்பர்ட் அண்டார்க்டிக்கா ஆராய்ச்சி கழகத்தில் பயண வழிக்காட்டியாக பணிப்புரிந்து வருபவர்..படுக்குளிரும் பனியும் ஒரு சேர உறவாடும் அப்பகுதியில், அவருக்கு துணையாக எட்டு சவாரி செய்யும் நாய்கள்.ஒரு நாள், புதன் கிரகத்திலிருந்த ஒரு அரிய வகை கல், மெல்போர்ன் என்ற பகுதியில் இருப்பதாக கூறிக்கொண்டு வருகிறார் பேராசிரியர் டேவிஸ் மெக்லேரன்.ஷெப்பர்ட், அங்கு பனிப்பாறைகளின் பிளவுகள் அதிகம் இருக்க வாய்ப்புகள் உண்டு என்று எச்சரிக்கிறார்.அதை மீறியும், தனது பாஸ் உத்தரவின் பேரில் ஷெப்பர்ட், அந்த இடத்துக்கு அழைத்து செல்ல சம்மதம் தெரிவிகிகிறான்.மறு நாள் காலை, இருவரும் எட்டு நாய்களின் சவாரி பயணத்தோடு புறப்படுகிறார்கள்.
அது ஒரு நீண்ட தூர பயணம்...எங்கும் பனிப்பாறைகளும் பிளவுகளும் உயிரை காப்பாற்றிக்கொள்ள எடுக்கும் முயற்சிகளும் என அத்தனையும் பயங்கரமான தருணங்கள்.கண்ணில் கண்ட அழகெல்லாம் உண்மைகள் இல்லை..ஆபத்துகள் அதிகம் என்பதை சொல்லாமல் சொல்கிறது அண்டார்ட்டிக்கா போலும்,

இவர்களது பயணத்துக்கு இடையே, கழகத்திலிருந்து ஷெப்பர்ட்டுக்கு அழைப்பு வருகிறது.அதாவது, பலத்த புயல் தாக்கவிருப்பதாகவும் ஆதலால் விரைவில் திரும்பிவிடவும் என்று செய்தி வருகிறது.அன்று அங்கேயே தங்கிவிட்டு காலையில் முதல் வேலையாக புறப்பட வேண்டும் என பேராசிரியரிடம் கூறுகிறான்.ஆனால், "வந்த வேலை முடியவில்லை. மெல்போர்னுக்கு வந்திருப்பினும் கல்லை இன்னும் தேட தொடங்கக் கூட இல்லை.இவ்வளவு தூரம் உயிரை அடகு வைத்து இங்கு வந்துவிட்டு கல்லை தேடாது சென்றால் எல்லாம் விரயம் ஆகிவிடும்" என்று பேராசிரியர் ஷெப்பர்ட்டிடம் சொல்கிறார்.முதலில் மறுக்கும் அவன் பிறகு ஒத்துழைக்கிறான்.காலை விடிந்தது.தேடலில் இருவரும் இறங்குகிறார்கள்..இறுதியில் அந்த அரிய கல் கிடைக்கவே அங்கிருந்து கிளம்புகிறார்கள்.இதற்கிடையே, புயல் தனது வேகத்தை அதிகரித்துக் கொண்டு இந்த இடத்தை தாக்கவிருப்பதாக செய்தியும் நிலையத்துக்கு கிடைக்கிறது.

எட்டு நாய்களும் வேகத்தோடு இவ்விருவரையும் இழுத்துக் கொண்டு போகிறது.. திடீரென்று ஒரு நாயுக்குக்கு ரத்தம் கசியவே, இறங்கி பார்க்க வருகிறார் ஷெப்பர்ட்.அவரோடு இறங்கிய பேராசிரியர் தப்பித்தவறி பனி பிளவு ஏற்பட்டு கீழே விழவே கால் முறிகிறது.பற்றாக்குறைக்கு பனிகட்டியும் வேறு, உடைந்து தண்ணீரில் தத்தளிக்கிறார்.எப்படியோ நல்ல வேளையாக நாய்களின் உதவியோடு ஷெப்பர்ட் அவரை காப்பாற்றுகிறார்.இதற்கிடையே புயல் வேகம் அதிகரிக்கிறது.நாய்கள் காட்டுமிராண்டித்தனமாக அவ்விருவரையும் இழுத்து செல்கிறது.உடல் நலம் பாதிக்கப்படுகிறார் ஷெப்பர்ட். இறுதியாக, நாய்களின் அயராத உழைப்பால் நிலையத்துக்கு வந்து சேர்கிறார்கள்.

உடல் நலம் குன்றிய நிலையில், நாய்களை இங்கேயே விட்டுவிட்டு அனைவரும் கிளம்புகிறார்கள்.இவர்களை நல்லப்படி சேர்த்துவிட்டு, மீண்டும் வந்து நாய்களை அழைத்துவருவதாக வாக்குறுதியும் அளிக்கிறார்கள். ஆனால், நடந்தது என்ன ? கடும் பனிப்புயலால் தடை விதிக்கப்படுகிறது.யாரும் அந்த இடங்களுக்கு செல்ல முடியாதவாறு தடுக்கப்படுகிறது.நாய்கள் அங்கே..நாயகன் இங்கே !! உயிர்களை காப்பாற்றி பல செயல்களுக்கு உறுத்துணையாக விளங்கிய அந்த நாய்களை காப்பாற்றினார்களா ? இல்லை உயிர்பலிகள் ஏதேனும் நிகழ்ந்ததா ?? போன்ற பல கேள்விகளுக்கு விடைக்கான திரைப்படம் பார்ப்பதே உத்தமம்.

பொதுவாக நாய்களை மையப்படுத்தி வரும் படங்களை அதிகம் நான் பார்த்ததில்லைகண்டவரை எனக்கு பிடித்த படங்களாக லாஸ்சி மற்றும் தெ எட்வெண்டுரஸ் ஓஃப் யெல்லோ டோக் ஆகியவற்றை சொல்லலாம்.பெரும்பாலான இந்த படங்களில் நாயகனை சிறுவனாக காட்டி, அவனுக்கு அந்த நாய் செய்யும் உதவிகளை சொல்லிருப்பார்கள்.அந்த வரிசையில் எயிட் பிளோ இதுவரை வந்த நாய் சம்பந்தபட்ட திரைப்படங்களில் சிறந்த படம்.மிருகங்கள் மீதான மனிதர்களின் சுய நலத்தை, நாய்களுக்கு உள்ள சிறந்த குணங்களை அவ்வளவு சிறப்பாக காட்டிருக்கிறார்கள்.

மெல்லிய மனதை உறையவைக்கும் சில்லென்ற ஒரு கதையை அதே போக்கில் விட்டு படமாக்கி இருப்பவர், ஐந்து முறை ஆஸ்கருக்கு பரிந்துரைக்கப்பட்டவரும் ஸ்பீர்பெர்க் அவர்களின் ஆஸ்தான தயாரிப்பாளர்களில் ஒருவரான ஃப்ரேங்க் மார்ஷல்.அநேகமாக இவருக்கு சர்வைவல், எட்வெண்ட்ச்சர் போன்ற கதைகளில் அதிக ஆர்வங்கள் இருக்கும் என நினைக்கிறேன். சில மாதங்களுக்கு முன்னர் எலைவ் என்ற படத்தை பார்க்க வாய்ப்பு கிட்டியது.ஒரு விமான விபத்தால் அலாஸ்கா தீவில் சிக்கி உயிருக்கு போராடும் ரக்பி ஆட்டக்காரர்களை பற்றியது அது.உண்மை சம்பத்தின் தழுவலில் வந்த அப்படத்துக்கு ஈடுக்கொடுத்து மனிதனுக்கும் நாய்களுக்குமான ஓர் அற்புத உறவை திரையில் காண்பித்துள்ளார் இயக்குனர்.

கதைனாயகனாக, அலட்டிக்கொள்ளாமல் கதைக்கு தேவையான நடிப்பை இயல்பாக வழங்கிருக்கிறார் Paul Walker.தான் வளர்ந்த நாய்களை தொட்டு தழுவி அரவணைக்கும் போதும், நீண்ட தூரமிட்டு தனது உயிர்களை நினைத்து வருந்தும்போது பாசத்தையும், பேராசிரியருடனான பயணத்தில் அவருக்கு ஆபத்து ஏற்படும் வேளையில் படப்பட உணர்வையும் குரல், முகம் என அனைத்தையும் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளார்.
அதே போல கதைக்கு தேவையான துணைக் கதாபாத்திரத்தில் ஹீரோயின் Moon Bloodgood  போன்றவர்கள் தத்தம் நடிப்பில் ஒளி வீசியுள்ளனர்.அப்புறம், சும்மா சொல்லக்கூடாது நாய்கள் அத்தனையும் செம்ம பியுட்டி..

அழகான ஃபோட்டோகிராப்பிக் - அதன் மீதான எனது அலாதியம் மிக பெரியது.டிரைலர் பார்த்துவிட்டு வெறும் கேமராக்காகவே எத்தனையோ படங்களை பார்த்த அனுபவம் உண்டு..அதுவும் எயிட் பிளோ படத்தின் கதைச்சுருக்கத்தை படித்தவுடனே எப்படியும் பார்த்துவிட வேண்டும் என தோன்றிற்று.அதற்கு முதன்மை காரணம், அண்டார்ட்டிக்கா என்ற பெயரும் குளிரும்தான்.அலாஸ்கா, கிரின்லாந்து போன்ற இடங்களில் எடுக்கப்பட்ட இப்படத்தில் வரும் குளிரை நாமும் உணர்ந்திடும்படி செய்துள்ள ஒளிப்பதிவாளர் Don Burgess அவர்களுக்கு நன்றிகள்.

இந்த சாதாரணமான கதையை வெறும் மனிதர்களை காட்டியே எடுத்திருந்தால் மொக்கையாகிருக்கும். அதை தவிர்க்க, தனது எஜமானரை பிரிந்து ஏங்கி தவித்து உயிருக்கு போராடும் நாய்களின் சூழலை வசனங்கள் இன்றி சிறப்பாக எடுத்துரைக்கும் காட்சிகளை எடுத்திருக்கும் திரைக்கதையாளர், இயக்குனர் மற்றும் படக்குழுவினரை எவ்வளவு பாராட்டியும் தகும்.அதுவும் பிற்ப்பாதியில் நாய்களின் சாகசங்கள் அசத்தலாகவும் (பனிச்சிறுத்தை உடனான சண்டை உட்பட) இருக்கும்.கிளைமக்ஸ் என்னதான் ஓரளவு மகிழ்ச்சியானது என்றாலும் படம் முழுவதும் வரும் ஒரு விதமான மெல்லிய சோகம் நம்மையும் தொற்றிக்கொள்ளும். அச்சோகம் சுகமானதும் கூட...

நல்ல காலை, மாலை அல்லது இரவு நேர மழை வேளையில், வீட்டுக்குள் குளிர்ச்சாதனம் போட்டவாறு அல்லது ஜன்னல்களை திறந்துவிட்டவாறு பார்த்து ரசிப்பதற்கு ஏகுவான திரைப்படம் எயிட் பிளோ.அதுவும் நாய் வளர்ப்பவர்கள் மிஸ் செய்யக்கூடாத, சிறுவர்களோடு கட்டாயம் பார்க்க வேண்டிய சினிமா.

@@====================================@@@======================@
Eight Below (2006) : எட்டு ஹீரோக்கள்..ஒரு நாயகன்
@@====================================@@@======================@

Related Posts Plugin for WordPress, Blogger...