Monday 7 July 2014

The Changeling (1980) - பயங்கரங்கள்..

அது ஒரு அழகான பனி சூழ்ந்து கிடக்கும் பகுதி..டைட்டில் கார்டு போடவே அங்கிருந்து தொடங்குகிறது படம்..குடும்பத்தோடு வெக்கேஷனுக்கு வந்த இடத்தில் கார் பழுதாக ஜோன் ரசல் மற்றும் அவரது மனைவி மற்றும் மகள் தள்ளிக்கொண்டு வருகின்றனர். வாகனம்தான் ஏதோ கவலையில் பழுதாகிவிட்டதே தவிர, அவர்களின் முகத்தில் சந்தோஷமும் மகிழ்ச்சியும் தாண்டவமாடுகின்றது.நல்ல பேச்சுக்களுடனே ஒரு வழியாக போன் பூத்துக்கு வந்து சேர்கிறார்கள்..ரசல் போன் செய்ய பூத்துக்கு போன சமயம், அக்கம் பக்கம் சுற்றி எங்கிலும் வாகனங்கள், ஆள் நடமாற்றம் இல்லாத இடத்தில், தூரத்தில் காரும் இன்னொர் புறத்தில் லாரியும் வருவதை பார்க்கிறார்.ஏதோ ஓரமாக வருவதாக எண்ணி, போன் செய்யும் ரசல்.... வினாடிகள் அதிகரிக்க அந்த இரு வாகனங்களும் ஒன்றொன்றை மோத போவதை உணருகிறார்.பலத்த வேகத்தில் கண் முன் தெரியாமல் அவ்விரண்டும் எதிர்ப்புறத்தில் வர, பார்வைகளின் முன்னே கொஞ்சி களைப்புடன் விளையாடும் மனைவியும் மகளுமே தெரிகின்றனர்...லாரியும், காரும் வேகமாக அருகில் வர ஏதோ அதிர்ச்சியுடன் வெளியே வர முயல....டம்..டம்...பம்..பம்..மனைவி மற்றும் மகளின் வாழ்க்கையோடு காட்சியும் முடிவை காண்கிறது

 சில நாட்கள் கடக்கின்றன...வருத்தங்கள் மறையாத நிலையில் மறக்க வேண்டுமே என்ற நினைப்பில், இசை பேராசிரியரான ஜோன் ரசல் வேறொரு ஊருக்கு குடிவருகிறார்.அழகான சியாட்டில் நகரம் அது.அங்கே இசை பேராசிரியராக வேலைக்கு சேர்கின்றார்.கூடவே தங்குவதற்கும் தனிமையான சூழலில் வாழ்வதற்கும் ஏற்றாற்போல ஒரு பெரிய மேன்ஷனும் வாடைக்கு கிடைக்கிறது.யாருமே பல வருடங்களாக குடி இருக்காத மாளிகை அது..ஒரே ஒரு பணியாளர்..அவரும் காலையில் வந்துவிட்டு வெளிப்புறம், உள்ப்புறம் என்று சுத்தம் செய்துவிட்டு திரும்பிவிடுவார்..இரவு நேரங்களில் தங்க வேண்டிய கட்டாயம் என்பதைக் காட்டிலும் தனிமையே அவருக்கும் பிடித்திருக்கிறது..சில நாட்கள் ஓடுகின்றன..பியானோ, இசை, நண்பர்கள், மாணவர்கள் என்று இப்படியே சகஜமாகவும் கழிகிறது..

இதுவரை சொன்னவை..முதல் 20 அல்லது 25 நிமிடங்கள் வருபவையே...இங்கு தொடங்கும் காட்சிகள்..திரைப்படத்தின் உச்சத்துக்கு செல்பவை..உச்சம் என்ற வார்த்தை அந்த மாளிகைக்கும் பொருந்தும். திடீரென்று கண்ணாடி உடைதல், சில சத்தங்கள் என்று தொடர்ந்து வினோதமான நிகழ்வுகள் மாளிகையின் மேல் மாடியில் நிகழுவதை உணர்கிறார் ரசல். இவை அனைத்தையுமே எதார்த்தமாக பழைய வீட்டில் நிகழும் கோளாருகள் என்று நினைத்துக்கொள்ளும் ரசலுக்கு மேலும் சில அடிகள் விழுகின்றன.இந்த அடிகள் சகஜமானவை அல்ல....இது நாள் தான் ஒருவன் மட்டுமே தனியாக வாழ்வதாக நினைத்து வந்தரின் நெஞ்சை உலுக்கும் வகையில் கண்ணுக்கு தெரியாத பேய் நடமாட்டங்கள் நடப்பதை உணர்கிறார். இதற்கு ஒத்திவைத்தாற் போல அந்த..அந்த..உருவம்..

குழம்பி தவிக்கும் ரசல் சில உதவிகளை நாடுகிறார்..அதன் முதல் கட்டம்தான் இந்த மாளிகையை வாடிக்கைக்கு வாங்கி தந்த நோர்மன் என்ற திருமணமான பெண்..இவரிடம் சொல்லி நம்ப மறுக்க வேற விதமான உதவியை பெறுகிறார்.அதுதான் ஆவிகளோடு தொடர்புக் கொள்ளும் மீடியம்.

இவர்களது உதவியுடன் பல திடுக்கிடும் புதைந்துப்போன ரகசியங்கள் வெளிவருகின்றன..மேலும், இதனை கண்டரிய பல செயல்களை செய்கிறார்..இவை அனைத்தும் சுமார் 70 ஆண்டுகளுக்கு முன்னர்  நிகழ்வுக்கு கொண்டு செல்கின்றன..உண்மையாக அங்கு நடந்தது என்ன ?? அது உண்மையாகவே பேயா..ஆவியா ?? உயிர் பலிகள், ஏதாவது கெட்டது நிகழ்ந்ததா ?? இவை எல்லாத்துக்கும் உள்ளே இருக்கும் மர்ம முடிச்சுகள், சத்தியங்கள் என்ன ?? என்பதை திரையில் பார்ப்பதே சிறந்த மருந்து..ஒரு புதுமையான அனுபவமாக இருக்கக்கூடும்//


சில மாதங்களுக்கு முன்பு இணையத்தில் கிடைத்த படமிது.. விமர்சனங்கள், ரசிகர்களின் கருத்துக்கள் என்று பெரும்பாலும் சிறப்பாக இருக்கவே நிறைய எதிர்ப்பார்ப்புகளோடு பதிவிறக்கம் செய்து வைத்தேன்..சில நாட்கள் வேலை பளு, சில நாட்கள் வேறு படங்கள் என்று வாய்ப்பு கிடைக்காமலேயே தட்டிச் செல்ல ஒரு வழியாக பார்த்திட வேண்டுமென்று விடாப்பிடியில் இந்த படத்தை பார்த்தேன்.ஏற்கனவே கதை, காட்சிகள் என்று சிலவற்றை படித்ததாலோ என்னவோ படத்தோடு ஒன்றவே நேரம் பிடித்தது.


எதிர்ப்பார்ப்புகள் பொங்க படத்தை பார்த்தாலே இதான் பிரச்சனை.நல்ல படமெல்லாம் மிளகாய் தூளை கண்ணில் கொட்டின மாதிரியே இருக்கும். ஏதோ ஒரு வழியாக படத்தில் ஒன்றிப்போக, காட்சிகள் நகர நகர நன்றாகவே இருந்தது..படம் முழுவதும் ஏதோ ஒரு விதமான தனிமை உலாவுகிறது. கதாபாத்திரங்களை அதிகரிக்காது, ஒரு குறிப்பிட்ட சூழலை சுற்றியே ஆனால் அதற்கு சற்றுக்கூட சம்பந்தம் இல்லாது காதாபாத்திரத்தை வைத்து திரைக்காட்சிகளை நகர்த்தி இருப்பதே படத்துக்கு கிடைத்த பெரும் வெற்றியாக இருக்கும்.

படத்துக்கு மிக பெரிய ஆறுதலும் பெரிய பலமே ஜோன் ரசல்-ஆக வரும் ஜோர்ஜ் சி. ஸ்கோட்.குப்ரிக்கின் டாக்டர் ஸ்ட்ரேன்ஞ்லவ் படம் பார்த்தவர்களுக்கு இவரை நன்கு தெரியும்.எந்த கதாபாத்திரத்தையும் திறம்பட செய்து முடிக்க கூடிய கெட்டிக்காரர்.இயல்பான நடிகர்..இவர் அதுவும் இந்த ஹாரர் படத்தில் நடித்ததே பெரிய சிறப்பு.அவருடைய முக பாவனைகள் அத்தனையும் அருமையாக வெளிப்படுத்தப்பட்டிருக்கின்றன. சிகரட்டை பிடித்துக்கொண்டு வாசிக்கும் பியானோ காட்சி, அப்புறம் அந்த டேப் ரெகோர்டெர் (சுவாரஸ்யமான ஒன்று) காட்சி என்று அசால்ட்டான நடிப்பை கொடுக்கிறார்.

அந்த பழைய அரண்மனையில் பேய் நடமாட்டமோ ஏதோ கெட்ட சக்தியோ உலாவருவதை..சில காட்சிகளின் மூலம் மிகவும் தெளிவாக அதைவிட முக்கியம் உயிரோட்டமாக காட்டிருப்பார்கள்.பியானோ தானாக வாசிக்க தொடங்குவது..தொடர்ச்சியாக இரண்டு நாட்களுக்கு நீர் குழாயில் சத்தம் வருவது..மேல் மாடியில் சத்தம்..கண்ணாடி ஜன்னல் உடைவது என்று மெதுவாக ஒவ்வொரு காட்சியையும் பயத்தை கூட்டும் வகையில் இருக்கும்.அதுவும், அந்த மீடியம் காட்சி..அருமையானது.அதுவும் அந்த உரையாடலை ஒலிப்பதிவு செய்துவிட்டு, அதை திரும்பி போடவே ஒலிக்கும் குரல்..யெப்பா ஸ்கிரீனில் பாருங்கள்.
கனடா நாட்டில் தயாரிக்கப்பட்ட இந்த படம் அன்றைய ஆண்டுக்கான சிறந்த திரைப்படம், நடிகர், நடிகை, திரைக்கதை, ஒளிப்பதிவு, எடிட்டிங் என்று சுமார் ஒன்பது Genie விருதுகளை அள்ளிச் சென்றது..இது எந்தவொரு ஹாரர் படத்துக்கு கிட்டாத அரிய வாய்ப்பு என்பது குறிப்பிடதக்கது.பிரபல இயக்குனர் மார்ட்டின் ஸ்கோர்ஸசி-க்கு மிகவும் பிடித்த 11 திகில் படங்களில் ஒன்றாக இந்த படத்தை குறிப்பிட்டுள்ளார்.இவரது லிஸ்டில் இதோடு சேர்த்து ஐந்து படங்களை பார்த்தாச்சு.படிக்காதவங்க படித்துட்டு படம் பார்த்துருங்க..அத்தனையும் டெரர் ஆன படங்கள்..பிளீஸ் டோண்ட் மிஸ் தேம்..


இன்றைய சினிமா உலகில் அதிகபட்சமான வன்முறையும் ரத்தங்களும் ஹாரர் படங்களில் வழிந்து ஓடுவதை பார்க்க முடிகிறது.இந்த படங்களை பார்த்து வருபவர்கள் ஒரு வேளை ஏதாவது ஒரு வித்தியாசமான ஹாரர் கிடைக்குமா என்று தோன்றலாம்..அப்படி நினைப்பவர்களுக்கு The Changeling.


No comments:

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...