Friday 7 February 2014

கடவுள் இருக்கிறாரா - நானும் சுஜாதாவும்

ரொம்ப வருடங்களாக என்னை நானே பல முறை கேட்டுக் கொண்ட இதே கேள்விக்கு சுஜாதா அவர்களின் பதில்கள்.இப்புத்தகத்தில் தாராளமாக கொட்டிக்கிடக்கின்றன. சமீபக்காலத்தில் வாசித்த புத்தகங்களில் நல்ல அனுபவமாக உருவான தகவல் களஞ்சியமாக கூறலாம்.

சின்ன வயதில் கடவுள் என்பவரை மெல்ல மெல்ல சோதித்த அனுபவங்கள் நிறையவே உண்டு எனக்கு.அம்மா சொன்னார் அப்பா சொன்னாரென்று எந்த வித அர்த்தங்களும் தெரியாமல் மற்றவர் சொன்னதுக்காக சாமி கும்பிட்டதும் கிடையாது.கோவிலுக்கு போவேன்..வேடிக்கை பார்ப்பேன்.. கடவுளோடு உள்ளுக்குள்ளேயே சில விடயங்களை பேசிக்கொள்வேன்.எந்த நேரத்திலும் முறையாக பிரார்த்தனை செய்ததாக ஞாபகம் இல்லை.ஏன் போகிறேன், எதுக்காக கற்றுக்கொள்கிறேன் என்றுக்கூட தெரியாது தேவார வகுப்பு, பாடல்கள் எல்லாம் பாடி பஜனை செய்ததும் உண்டு.

ஒரு முறை எங்களது வகுப்புக்கு ஒரு பெரிய சாமியார் ஒருவர் வந்து, எல்லோரும் ஆசிர்வாதம் வாங்க..நான் மட்டும் விதிவிலக்காக நான் ஏன் உங்கள் காலில் விழ வேண்டும் ? நீங்கள் என்ன கடவுளா ? என்றெல்லாம் அவரிடம் கேள்வி கேட்ட நொடிகள் எல்லாம் மறக்க முடியாதவை. வகுப்பில் பலர் சொல்லியும் இறுதிவரை காலில் விழவும் இல்லை..வணங்கவும் இல்லை.விடைப்பெறும் போது ஒரு புன்னகை புரிந்து நான் அவ்வளவு பேசியும் மிகவும் அமைதியாக அந்த மகான் (அவரது பெயர் ஞாபகமில்லை) எனது நெற்றியில் திருநீறு பூசிவிட்டு சென்றதை இன்றுக்கூட ஏதோ  உணர்கிறேன்.அப்போது எனக்கு 8, 9 வயது இருக்கும்..ராகு தசை வேறு ஓடியதாம்..(ஆமா..இவனுக்கு சுக்கிரன் ஓடுனாலும்)

அந்த நிகழ்வுக்கு மறுநாளே வகுப்பு ஆசிரியர்கள் வீடு வரை வந்து காலையிலேயே அம்மாவிடம் புகாரும் செய்தனர்..பிறகு அந்த மகான் அந்த சம்பவம் நிகழ்ந்த அடுத்த வாரத்தில் இறந்துப்போனதும் எனக்குள் ஏற்பட்ட குற்ற உணர்ச்சி இன்னும் நிலைக்கிறது.இதுவெல்லாம் பெரிய நிகழ்வு..விவரிக்க இன்னொரு பதிவை எழுத வேண்டிவரும்..அவ்வளவு இருக்குங்க.சுமமாவா பின்ன ?

அப்படி தொடர்ந்த எனது வாழ்வில் பல மாற்றங்கள்..10 வருடங்களுக்கு முன்பு யார் அந்த கடவுள் என்று கேட்டேனோ ? அதே கடவுளை இன்று நேசிக்க தொடங்கிய கதை விசித்திரமானது.அறிவியலை ஏதோ இறைசக்தியாக நம்பி உண்மையான கடவுளை கோட்டை விட்ட நாட்களை எண்ணி வருந்துகிறேன்.சின்ன வயதில் இறைவனை தேடியவன் இதுவரை தேடுகிறேன்..ஆனால் தேடல் வித்தியாசமானது..கொஞ்சம் விவரமானதும் கூட.எந்த குருவை அன்று உதாசினம்-படுத்தினேனோ அதே குருவை இன்று தேடுகிறேன்.எல்லாம் வல்ல நாராயணன் அருள வேண்டும்.

அந்த வரிசையில் இப்புத்தகம் எனது தேடலில் ஒரு சிறிய பாதிப்பு ஏற்படுத்தியது என்றே சொல்ல வேண்டும்.சரியாக எழுதப்பட்ட வருடம் தெரியவில்லை என்றாலும் ஒரு காலக்கட்டம் வரை அறிவியலால் நிரூபிக்கப்பட்ட சாட்சியங்களை கடவுள் சக்தியோடு ஒப்பிட்ட விதம் சுஜாதாவுக்கு நிகர் அவர்தான்.கடவுள் நம்பிக்கை என்பது அவர் அவர் மனோத்தன்மைக்கு ஏற்ப மாறுப்படும் என்று மதிப்பவன் நான்.இதில் நான் நாத்திகன் நீ ஆத்திகன் என்ற பேதமோ சண்டைகளோ தேவையே இல்லை என்று நினைக்கிறேன்.நம்மையும் தாண்டி சில விஷயங்கள் நிகழும்போது எங்கேயோ இந்த பிரபஞ்சத்தின் தூண்டுதலுக்கு, நம்மையும் தாண்டி ஏதோ ஒரு சக்தி இருக்கிறதோ ? என்ற நினைப்பில்,, அந்த மாபெரும் சக்தி அறிவியலாக இருந்தால் என்ன ? ஆண்டவனாக இருந்தால் என்ன ? எல்லாம் பகவான் என்று பார்க்கும் மனோப்பக்குவம் வேண்டும் என ஆன்மீகம் கூறுகிறது.. எல்லாமே பகவான்-தான் எனும் போது, அறிவியலும் பகவான்-தானே.!!

இறை சக்தி, அறிவு சக்தி இந்த இரண்டில் எதை நம்பினாலும் இப்புத்தகம் வாசிக்காதவர்கள் தயவு செய்து வாசியுங்கள்.ரொம்பவும் நிறைய அரிய தகவல்களும் சுவாரஸ்யங்கள் நிறைந்துள்ளது.டவுன்லோடு போட விரும்புவர்கள் உள்ள லிங்கை பயன்ப்படுத்திக்கொள்ளலாம்.மீண்டும் அடுத்தொரு பதிவில் சந்திக்கலாம்.அதுவரை   

Related Posts Plugin for WordPress, Blogger...