Tuesday 25 December 2012

Hugo (2011)..

வணக்கமுங்க..இவ்வளவு நாட்களாக என்னையும் மதித்து என்னுடைய எழுத்துக்கும் தொடர்ந்து ஆதரவு வழங்கும் எல்லா வாசகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள் மற்றும் வணக்கத்தை கூறிக்கொள்கிறேன்.. நீங்கள் அன்றி நான் யேது..வாங்க இன்றைய பார்வையை கொஞ்சம் பார்க்கலாம்..  

மார்ட்டின் ஸ்கார்சஸி என்னும் திரைக்கலைஞனின் மீது வெகுவான அபிப்ராயம் எனக்குள் எப்பொழுதும் உண்டு.அநேகமாக அது டாக்ஸி டிரைவர் கண்ட போது தொடங்கிருக்க வேண்டும்.இவரது படைப்புகள் ஒவ்வொன்றையும் நான் தங்க சுரங்கங்களாக எண்ணுகிறேன், மதிக்கிறேன்.அமெரிக்க சினிமாவுக்கு புது பரிணாமத்தை வழங்கி உலக தரத்துக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று எண்ணி பாடுப்பட்டு வரும் இயக்குனர்களில் ஸ்கார்சஸி முக்கியமானவர்.

அதற்கு இன்னொரு சான்றாக சென்ற வருடம் (2011) வெளிவந்து ஐந்து ஆஸ்கர்களை கொத்திக்கொண்டு பறந்த படைப்புதான் ஹூகோ..சரியாக ஒரு வருடத்துக்கு முன்பு, ஐஎம்டிபியில் இந்த படத்தலைப்பை படித்த போதே மனம் எங்கோ சிறகடித்தது. அந்த நான்கெழுத்து பெயர் எதையோ தீவிரமாக சொல்லப் போவதை உணர்ந்திருந்தது போலும்...
எதிர்ப்பார்ப்புகளுக்கு குறைகள் வைக்காது, இறந்துப்போன தன் தந்தைக்காக இயந்திர மனிதனை இயங்க வைக்கும் பணியை முழுமையாக்க போராடும் ஹூகோ காப்ரட் என்ற கதை நாயகனின் உணர்வுகளை தடைகள் இல்லாது, பலரும் மறந்துப்போன ஒரு சினிமா மேதையின் நினைவுகளை பகிர்ந்து ஓர் அழகான கதையை பதித்து செல்கிறது திரைப்படம்.

பரபரப்பான கதைக்களம், ஆஸ்தான நடிகர்களான டி காப்ரியோ, டி நீரோ ஆகிய அம்சங்கள் எதுவும் இல்லாது, சிறுவனை மையப்படுத்தி தனது அடுத்த படத்தை ஸ்கார்சஸி இயக்க போகிறார் என்ற செய்தி வந்ததும் பலரும் நம்பிருக்க மாட்டார்கள் (என்னையும் சேர்த்து).""அதுவும் அடிதடி, அரட்டைகள், ரத்தம், கெட்ட வார்த்தைகள் தவிர்த்து இயக்குனருக்கு படம் பண்ண தெரியாது..கண்டிப்பாக இது மொக்கை படமாதான் ஆகும்"" என்று சிலர் சொல்லிருந்தாலும் ஆச்சரிப்படுவதற்கில்லை.ஆனால், தன்னாலும் இது போன்ற சமச்சாரங்கள் இல்லாது சிறந்த படைப்பை தர முடியும் என்பதை குண்டுன் (1997), லாஸ்ட் டெம்பெட்டேஷன் ஒஃப் ஜீசஸ் கிரைஸ்ட் ஆகியவை மூலம் நிரூபித்தும் வருகிறார் என்பது அனைவரும் அறிந்த உண்மையே.அந்த வரிசையில் இன்னும் பத்தாண்டுகளுக்கு இயக்குனரின் பெயரை சொல்லும் வகைக்கேற்ப உருவெடுத்துள்ளது ஹுகோ திரைப்படம்.படத்தின் மிக முக்கியமான மூன்று கதாபாத்திரங்களாக ஹூகோ, ஜோர்க் மெல்லிய்ஸ், இசபெல்..

ஹுகோவாக Asa Butterfield - இந்த சின்ன பையனை பற்றி சொல்லாமல் விட்டால் இது நாள் வரை எழுதிய "பார்வைகளுக்கு" அர்த்தம் இல்லாமல் போய்விடும்.ஒரு பெரிய இயக்குனர், குழுவினரின் படத்தில் நடிக்கிறோம் என்ற சிறிய அச்சமும் முகத்தில் தெரியவில்லை.நல்ல இயல்பான நடிப்பை வெளிப்படுத்த முயற்சி செய்து சில இடங்களில் தோல்வியை அடைந்தாலும் அருமையான பங்களிப்பை திகட்டாமல் வழங்கிருக்கிறார்.ஒரு வகையில் படத்தின் முதுகெலும்பே இவரது தோளில்தான்.காரணம், கதையின் சாராம்சமான ஜார்ஜ் மெல்லியஸ் என்ற திரை மேதையை திரையில் அறிமுகப்படுத்தும் பணியே இவரதுதான்.

ஜோர்ஜ் மெல்லியஸாக பென் கிங்ஸ்லி - இவரது கதாபாத்திர சிறப்பை விவரிக்க தனி கட்டுரை போட வேண்டும்.சுருக்கமாக கூறின், சினிமாவின் தொடக்கக்காலத்துக்கு பயணிக்க வேண்டும்.குறிப்பாக, 1890, 1910, 1920 ஆண்டுகளில் சினிமாவில் பல டெக்னிக்கல் அம்சங்களை புகுத்திய ஜார்ஜ் மெல்லியஸ் என்ற ஃப்ரான்ஸ் நாட்டினரை நம்மில் எத்தனை சினிமா ரசிகர்கள் ஞாபகத்தில் கொண்டிருப்போம் என்பது பில்லியன் டோலர் கேள்விதான்.The Invention of Hugo Cabret என்ற புதினத்தின் தழுவலில் அந்த கேள்விக்கு சிறு விடையை தரும் படம்தான் ஹூகோ.நம்ம ஏழாம் அறிவில் நம்ம போதி தர்மரை போல முழுவதுமான மெல்லியஸின் வரலாற்றை இத்திரை சொல்லவில்லை எனினும் ஓரளவு அறிந்துக்கொள்வதற்கு துணைப் புரிந்துள்ளது என்பதே நிஜம்.அவரை பற்றிய வரலாற்றை அறிவதற்கு இங்கு செல்லவும்.அதோடு மெல்லியஸ் எடுத்த நூற்றுக்கணக்கான படங்களில், பல இன்று YOUTUBE -ல் கொட்டிக்கிடக்கிறது..அதையும் தரிசித்து விடுங்கள்.இல்லை அவரது ஆவி எழுந்துவந்துடும்.


இசபெல்லாக Chloë Grace Moretz - நாயகனின் தோழியாக வந்து தனது அழகான தோற்றத்தாலும் படப்படப்பான முக பாவனைகளாலும் மனதை அலங்கரிக்கிறார்.மேலும், கதைச்சூழல்களை மேம்படுத்தும் இணைக்கும் பாத்திரமாக வலம் வருகிறார்..இன்னும் சில ஆண்டுகளில் ஹிரோயின் ஆகினாலும் நோ டவுட். 

இவர்களைத் தவிர்த்து, எவன் கிடைப்பான் கைது செய்யலாம் என்ற குறிக்கோளில், கூடவே பிடிப்பதை மட்டுமே லட்சியமாக கொண்ட நாயை உடன் கொண்டு ஸ்டேஷனை சுற்றி வரும் ரயில்வே இன்ஸ்பெக்டர் Gustave கேரக்டரில் Sacha Baron Cohen..எந்த பையன் போனாலும் நண்டுக்கண்ணில் பார்ப்பதும், அனாதையாக ஒருவன் சிக்கிவிட்டால் குற்றங்களைச்சாட்டி அனாதை இல்லத்துக்கு அனுப்பி வைப்பதும் என இவரது அட்டகாசமான நடிப்பாற்றல் படமுழுவதும்.

பக்கத்தில் வருபவர்களை தள்ளிவிட்டு ஹூகோவை பிடிக்க துரட்டுவதும் பிறகு ரயில் கதவில் சிக்கிக்கொள்வதும், இறுக்கமான முகத்தில் பெண்ணை பார்த்ததும் சிரிக்க முயற்சிப்பதும் என பல சுவாரஸ்யங்களை அடக்கிய இவரது பாத்திரம், கதையை தொய்வில்லாது கொண்டு செல்ல உதவி செய்கிறது.சில நிமிடங்களே வரும் ஜூட் லா பாத்திரம் கூட மனதுக்கு நிறைவையே தருகிறது.
இந்த படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜானி டெப் பற்றி நமது நண்பர் JZ ஒரு தொடரே எழுதிக்காரு.அதையும் இந்த கிளிக் செய்து படிங்க .....இதானே வேணானு சொல்றது, இந்த பதிவு படிச்சு, பின்னூட்டம் முடிச்சுட்டு போங்க.ஓகே.

1920 ஆண்டுகளில் பேரிஸ் நகரம் - வியக்கத்தக்க விந்தையான கற்பனைகளை கண் முன்னே தெளித்துவிட்டு பிரமிக்க வைக்கிறது. "ஐ சே..இந்த படத்த திரையரங்குகளில் பார்க்காம போய்ட்டோமே" என்று நெஞ்சம் 20 நிமிடங்களுக்கு ஒரு முறை அலட்டிக்கொண்டது.அவ்வளவு நேர்த்தி.படக்குழுவினர்களின் ஆய்வும் உழைப்பும் முயற்சிகளும் கண்களுக்கு காட்சிகளின் ஊடே புலப்படுகிறது.படம் துவங்கியதும் உயரத்திலிருந்து கேமரா அப்படியே லாவகமாக ஊர்ந்துச்செல்ல இறுதியாக அந்த பையன் ஒளிந்திருக்கும் 4 எண்ணை கடிகாரத்தில் காட்டும்பொழுது "யெப்பா" என இருந்தது.இவ்வளவு அழகான ஒரு படத்தை சமீபத்தில் பார்த்ததாக நினைவில்லை. அவ்வளவு நிறைவு.படத்தின் மற்ற குறைகளை மறைக்கும் அளவுக்கு தயாரிக்கப்பட்டுள்ளது. 

"சினிமா ஒரு கனவு தொழிற்ச்சாலை" - எங்கேயோ எப்பொழுதோ படித்த ஞாபகம்.உண்மைதான் என்று என் மனம் இன்று குழப்பிக்கொள்கிறதுகடந்தக்கால குறிப்புகளை, எதிர்க்கால கனவுகளையும் கற்பனைகளையும், நிகழ்க்கால நடைமுறையையும் ஒன்றிணைக்கின்ற பாலமாக சினிமாவை கருதுகிறேன்.இதில் மாற்று கருத்துக்கள் பல இருக்கலாம்.ஆனால், நான் நம்பும் ஒன்று.அவைகளை ஒரு தடவை நினைத்து பார்க்க சொன்னது ஹூகோ திரைப்படம்.இன்றைய சூழலில் சினிமா அன்றைய காலத்தில் ஒரு வியப்பு.திரையில் ஒரு ரயில் வந்தால் எங்கே நம்மை வந்து மோதிவிடுமோ என்று பயந்த ரசிகர்களை கண் முன் கொண்டுவந்தது இப்படம்.இப்பொழுது இது போன்றவை நகைச்சுவையாக இருக்கலாம்.ஆனால், கடந்த நூற்றாண்டின் இணையற்ற கண்டுபிடிப்பாக விளங்கும் சினிமாவில் கடந்தக்கால நினைவுகள் திரைப்பட ரசிகர்களாக நமக்கு என்றுமே சுகம்தான்.
இறுதியாக ஹூகோ - மார்ட்டின் ஸ்கார்சஸியின் ஆகச்சிறந்த படமா ?? எவறேனும் கேட்டால் ?? இல்லை என்றே பதிலளிப்பேன்.ஏதோ ஒரு புள்ளியில் தொடங்கும் கதை வேறொரு திசையில் முடிவதுப்போல் அமைவதை தடுக்க முடியவில்லை.ஆனால், கடந்த நாற்பது வருடக்கால திரை வாழ்வில் எட்டிப்பார்க்காத, சொல்லிறாத களத்தை திரையில் முன்வைக்க முயன்றிருக்கிறார் ஸ்கார்சஸி.அவரது அனுபவமே அதனை நேர்த்தியான ஒன்றாக மாற்றிருக்கிறது. அதற்கு பக்க பலமாக விமர்சகர்களும் சினிமா புள்ளிகளுமே துணை நிற்கின்றனர்.இயக்குனர் ஜேம்ஸ் கேமரூன் இப்படத்தை பார்த்துவிட்டு கூறிய வார்த்தைகள் இவை "It is magical to watch. This is absolutely the best 3D cinematography I've ever seen."எத்தனை காலதாமதமானாலும் சரி, திரை ரசிகர்கள் ஒரு போதும் தவற விடக்கூடாத 3டி திரைப்படமாக ஹூகோவை..அனைவரும் கண்டுக்களிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன்.  
_____________________________________________________________

_____________________________________________________________

ஏண்டா இந்த படம் பார்க்குறதுக்காடா இவ்வளவு நாட்கள் ஆனது-ன்னு யாராவது கேட்கலாம்..கேட்கனும்.படம் பார்த்து சில மாதங்கள் ஆகினாலும், அதே டைமில் எழுதிய திரைப்பார்வை இது.தொடர்ந்து வெளியிட முடியாததால், இந்த வருடத்தின் இறுதி பதிவாக... உலகமெங்கும் வாழும் அன்பர்களுக்கு கிறிஸ்துமஸ் தின நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு விடைப்பெறுகிறேன்.நன்றி.  

உங்கள் ஆதரோவோடு,
Related Posts Plugin for WordPress, Blogger...